பதிவு செய்த நாள்
14
மார்
2025
07:03
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தேர் திருவிழாவை முன்னிட்டு, நடந்த தீபந்த சேவையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம் காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவிலில் நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்துச் சென்றனர். தேர் நிலையை அடைந்தவுடன், பக்தர்கள் புனித தீர்த்த தெப்பக்குளத்தில் இருந்து, தோல் பையில் தண்ணீரை எடுத்து வந்து, உற்சவர் அரங்கநாத பெருமாள் உள்பட பல்வேறு சுவாமிகள் மீது ஊற்றி நேர்த்திக்கடனை செலுத்தினர். ஒரு பக்தர், மூன்று முறை தண்ணீர் எடுத்து வந்து சுவாமிகள் ஊற்றினர். நேற்று மாலை பல்வேறு ஊர்களில் இருந்து, பக்தர்கள் தீ பந்தங்களை எடுத்து வந்து, நான்கு ரத வீதிகளில் ஆடி கோவிலுக்குச் சென்று நேர்த்தி கடனை செலுத்தினர். நூற்றுக்கணக்கான ஜமாப் குழுவினர் மேளம் அடித்துச் செல்ல, பக்தர்கள் தீப்பந்தங்களை தூக்கி ஆடி வந்தனர். சரவணம்பட்டியைச் சேர்ந்த கரிவரத பெருமாள் கோவிலுக்கு உட்பட்ட பக்தர்கள், 650 மீட்டர் காடா துணி கொண்ட ராட்சத தீ பந்தத்தை தெப்பக்குளத்திற்கு எடுத்து வந்தனர். அங்கு சிறப்பு பூஜை செய்த பின், மாலை, 6:00 மணிக்கு தீபந்தத்தை, 80க்கும் மேற்பட்ட தாசர்கள் எடுத்து ஆடி சென்றனர்.
இதுகுறித்து சரவணம்பட்டியை சேர்ந்த தாசர்கள் கூறுகையில், நாங்கள் நான்கு தலைமுறைக்கு மேலாக, அரங்கநாத பெருமாள் கோவிலுக்கு, கிராம மக்கள் ஒன்றிணைந்து தீப்பந்தத்தை எடுத்து வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகிறோம். இந்த விழாவில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் பங்கேற்றனர். இவ்வாறு தாசர்கள் கூறினர்.