திண்டிவனம்: திண்டிவனம் அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் செஞ்சிரோட்டில் உள்ள பழமையான அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 7ம் தேதி துவங்கியது. அன்று காலை 9.30 மணிக்கு கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் துவங்கியது, நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. தொடர்ந்து யாக சாலையிலிருந்து புனித கலசங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து 9.40 மணிக்கு விநாயகர், முருகர், அங்காளபரமேஸ்வரி மூலவர் விமானம், சிவலிங்கம், துர்க்கையம்மன், நவகிரக சன்னதி உள்ளிட்ட சன்னதி கலசங்களிலும், புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பூஜைகளை திருக்குமளம் திருநாராயணநாத சுவாமிகள் தலைமையிலான குழுவினர் செய்தனர். விழாவில் முன்னாள் அமைச்சர் சண்முகம், ஸ்தபதிகள் கிருஷ்ணமூர்த்தி, முருகன் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி., குப்புசாமி தலைமையிலான போலீசார் மேற்கொண்டனர்.