பதிவு செய்த நாள்
26
மார்
2025
10:03
காரைக்கால்; ‘திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில், வாக்கிய பஞ்சாங்க முறைப்படி, 2026ல் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும்’ என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னிதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரைஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடைபெறும். அதன்படி, வரும் 29ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவதாக தகவல் பரவி வருகிறது.
கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் வெளி யிட்ட செய்திக்குறிப்பு: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி விழா தொடர்பாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29ம் தேதி சனி பெயர்ச்சி நடைபெறும் என, தகவல் பரவி வருகிறது. திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம், சனீஸ்வரர் கோவிலில் வாக்கிய பஞ்சாங்க முறையை பின்பற்றுகிறது. இந்த பாரம்பரிய கணிப்பு முறைப்படி, 2026ம் ஆண்டிலேயே சனிப்பெயர்ச்சி நடைபெறும். வரும் 29ம் தேதி வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். சனி பெயர்ச்சி நடைபெறும் தேதி, நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.