பதிவு செய்த நாள்
26
மார்
2025
10:03
சென்னை; திருப்பத்துார் மாவட்டம், கொரட்டி காளகத்தீசுவரர் கோவிலில், வால்மீகி ராமாயண ஓலைச்சுவடி கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்துார் மாவட்டம் கண்டிலி ஒன்றியம், கொரட்டி என்ற கிராமத்தில் உள்ள காளகத்தீஸ்வரர், ஞான பிரசூனாம்பிகா கோவில் திருப்பணியின் போது, ராஜகோபுரத்தில் ஐந்து சுவடிகளை, திருப்பத்துார் சரக ஆய்வாளர் நரசிம்மமூர்த்தி கண்டெடுத்தார். அவர், ஹிந்து சமய அறநிலையத்துறை செயலருக்கு தகவல் தெரிவித்தார். அவற்றை பராமரித்து பாதுகாக்கும்படி, சுவடித் திட்ட பணி பொறுப்பாளரும் இணை கமிஷனருமான ஹரிப்ரியா, சுவடித் திட்டப்பணி குழுவினரை அனுப்பி ஆய்வு செய்தார்.
இதுகுறித்து, சுவடி திட்ட பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைபாண்டியன் கூறியதாவது: பிரசூனாம்பிகா சமேத காளகத்தீஸ்வரர் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட ஐந்து சுவடி கட்டுகளை, கடந்த, 21ம் தேதி ஆய்வு செய்தோம். அவற்றில், 2,075 ஏடுகள் உள்ளன. அவற்றில் உள்ள குறிப்பு மற்றும் எழுத்து வடிவின் அடிப்படையில், 125 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட, வழிச்சுவடி மரபைச் சேர்ந்தது. அதாவது, கிருஷ்ண கவுண்டரும், பள்ளிக்கொடுத்தான் என்கிற கோவிந்தசாமி கவுண்டரும் சேர்ந்து எழுதிய சுவடிகளை பார்த்து, புதுச்சேரி சுப்புராய தம்பிரான் மகன் ஆறுமுகம் உபாத்தியாயர் படி எடுத்துள்ளார். அதன்படி, மூலச்சுவடிகள், 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டிருக்கலாம். இந்த சுவடிகளில், வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து, வசன நடையில் மிக விரிவாக, ‘ஸ்ரீ ராமாயணக் கதை’ என்ற பெயரில் எழுதப்பட்டு உள்ளது. இதில், பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம் ஆகியவை மட்டும் உள்ளன. இவற்றில் பல ஏடுகள் காணப்படவில்லை. இவை, பல ஆண்டுகளாக சுற்றப்பட்ட நிலையிலேயே இருந்ததால், பூஞ்சை படிந்து உள்ளன. அவற்றை சுத்தப்படுத்தி, வேதியியல் பராமரிப்பு செய்கிறோம். இது, சமஸ்கிருத வார்த்தைகள் அதிகம் கலக்காத வசன நடையில், பொது மக்கள் படித்து புரிந்துகொள்ளும் நிலையில் உள்ளது. அதனால், இவற்றை பிரதியெடுத்து, பதிப்பிக்கலாம். அறநிலையத்துறையின் அனுமதி கிடைத்தால் அதை செய்யலாம். மேலும், சிவன் கோவிலில், ராமாயணம் ஓலைச்சுவடி கிடைத்திருப்பதற்கான ஆய்வையும் செய்ய வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
செப்பேடுகள்; தமிழகத்தில், ஹிந்து சமய அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில், 43,762 கோவில்கள் உள்ளன. அதேபோல, பழமையான மடங்களும் நிறைய உள்ளன. அவற்றில், நம் வரலாற்றை தாங்கிய செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் நிறைய உள்ளன. இதுவரை, 1,771 கோவில்களில் தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அவற்றிலேயே, ஒரு லட்சத்து, 78,000 சுருணை ஓலை ஆவணங்கள், 390 இலக்கிய சுவடிகள், 95 செப்பேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில், 50,028 சுவடிகள் முறையாக பராமரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதுவரை, ஓலைச்சுவடிகளில் இருந்து பிரதியெடுக்கப்பட்டு, ஐந்து நுால்கள் பதிப்பிக்கப்பட்டு உள்ளன.
ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும்; கோவில்களில் உள்ள ஓலைச்சுவடிகளை கண்டறிந்து, பராமரித்து பாதுகாக்கும் வகையில், திருக்கோவில் ஓலைச்சுவடி ஆய்வு மையம் அமைக்கப்படும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது. அது அமைக்கப்பட்டு, கண்டெடுக்கப்படும் ஓலைச்சுவடிகளை பாதுகாத்தால், ஆய்வாளர்களுக்கு பயனளிக்கும். அதேநேரம், திருட்டு பயத்தில் இருந்தும் காக்க முடியும்.