பதிவு செய்த நாள்
11
டிச
2012
10:12
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில், பணம், பொருட்களை பறிகொடுக்கும் பக்தர்கள், புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காத போலீசாரின் அலட்சியத்தால், திருட்டு அதிகரித்து வருகிறது. எப்போதும் கூட்டநெரிசல் உள்ள, அக்னி தீர்த்த கடற்கரையில், பக்தர்கள் வேஷத்தில் ஊடுருவும் திருடர்கள் , குளிக்க செல்லும் பக்தர்களின், பண பேக், செல்போன் அபேஸ் செய்கின்றனர். பாவம் தொலைந்திட நீராடும் பக்தர்கள், பணம், பொருட்களையும் தொலைத்து, ஊர் திரும்ப காசின்றி தவிக்கின்றனர். இச்சம்பவம், மாதத்திற்கு 10 முறை நடக்கிறது. பணத்தை பறி கொடுத்து, புலம்பும் பக்தருக்கு, கோயில் போலீசார் தரும் பரிசு, விரட்டியடிப்பு மட்டும் தான். கண்ட இடத்தில் "பையை வைத்தால் இப்படி தான்... விலாசம் தந்துவிட்டு ஊர் திரும்புங்கள்... கிடைத்தால் தருகிறோம், என கூறி, வழக்கு பதிவதில்லை. இதனால் ஸ்டேஷனுக்கு செல்ல, பக்தர்கள் தயங்குகின்றனர். பணமின்றி தவிக்கும் பக்தருக்கு, நல விரும்பிகள் தரும் உதவியுடன், கூனிகுறுகி ஊர் திரும்புகின்றனர். திருடர்களை பிடிக்க, போலீசார் கவனம் செலுத்துவது இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன், அக்னி தீர்த்தக்கடற்கரையில், இரு கண்காணிப்பு கேமராக்கள், அமைத்த நாள் முதல், செயல்படாமல் உள்ளது. இதனால் பயமின்றி உலாவும் திருடர்களுக்கு, தொடர் "ஜாக்பாட் தான். திருடர்களை பிடிக்க, போலீசாரை முடுக்கி விட, மயில்வாகணன் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.