பதிவு செய்த நாள்
11
டிச
2012
11:12
மதுரை: மதுரை உட்பட பல்வேறு இடங்களில், ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 71.71 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இன்னும் மீட்கப்படாத சொத்துக்கள் உள்ளதா என, வருவாய் துறை மூலம் ஆய்வு நடக்கிறது. இக்கோவிலுக்கு மன்னர்கள் முதல் பொதுமக்கள் வரை, நிலம், ஆபரணங்களை தானமாக வழங்கியுள்ளனர். இதற்கு ஆதாரமாக செப்பு பட்டயங்கள், ஓலைச்சுவடிகள் உள்ளன. மதுரை, சுற்றுப்பகுதிகளிலும், திருச்சியிலும் பல ஏக்கர் நிலங்கள், மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், உப கோவில்களுக்கும் உள்ளன. இவை ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இரு ஆண்டுகளுக்கு முன், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளின் ஆய்வில், 800 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரிந்தது. இதை மீட்க, ஓய்வு பெற்ற துணை கலெக்டர், தாசில்தார் நியமிக்கப்பட்டனர். மதுரை வண்டியூர், திருச்சி துவரங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில், 71.71 ஏக்கர் நிலம், தற்போது மீட்கப்பட்டது. அந்த இடங்களில், "கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமானது என்ற தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது தவிர, மீட்கப்படாத நிலங்கள் குறித்து, வருவாய் துறை உதவியுடன் ஆய்வு நடக்கிறது.
கோயில் நிலம் எவ்வளவு? : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, 1000.72 ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்கள் உள்ளன. இதில், 764.87 ஏக்கர் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. கோயில் பயன்பாட்டிற்காக, 164.14 ஏக்கர் உள்ளது.