வரும் 13ல் சித்ரா பவுர்ணமி நடவாவி உற்சவம்; கிணற்று நீர் வெளியேற்றும் பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஏப் 2025 03:04
அய்யங்கார்குளம்; ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் நடவாவி உற்சவம், அய்யங்கார்குளம் கிராமத்தில் விமரிசையாக நடக்கும்.
அதன்படி நடப்பாண்டு சித்ரா பவுர்ணமியான வரும் 13ல் நடவாவி உற்சவம் நடக்கிறது. உற்சவத்தையொட்டி 12ம் தேதி, இரவு 1:00 மணிக்கு, உபயநாச்சியாருடன் செவிலிமேடு கிராமத்தில் வீதியுலாவும், 13ம் தேதி காலை புஞ்சையரசந்தாங்கல், அப்துல்லாபுரம், துாசி, வாகை உள்ளிட்ட கிராமங்களில் பெருமாளுக்கு மண்டகப்படியும் நடக்கிறது. மாலை அய்யங்கார்குளம் கிராமத்தில் வீதியுலாவாக சென்று, இரவு 7:00 மணிக்கு சஞ்சீவராயர் கோவிலில் எழுந்தருள்கிறார். அங்கு பெருமாள் உபய நாச்சியாருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. அங்கிருந்து புறப்பட்டு, இரவு 9:00 மணிக்கு அப்பகுதியில் அமைந்துள்ள நடவாவி என அழைக்கப்படும் தரை மட்டத்திற்கு கீழ் உள்ள கிணற்று மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். உற்சவத்தையொட்டி நடவாவி கிணற்றில் உள்ள தண்ணீர் முழுதும் அகற்றும் பணி இன்று துவங்கியது. இதில், 10 எச்.பி., திறன் கொண்ட இரண்டு, ஆயில் இன்ஜின் மோட்டார் வாயிலாக கிணற்றில் உள்ள நீர் முழுதும் வெளியேற்றப்படுகிறது. இப்பணி முடிந்ததும் கிணற்றின் உட்பகுதி சுத்தப்படுத்தும் பணி துவங்கப்பட உள்ளது.