பதிவு செய்த நாள்
11
டிச
2012
11:12
திருச்சி: ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் உள்ள, நான்கு கால் மண்டபம் உள்பட, மூன்று மண்டபங்கள், பக்தர்களின் பயன்பாட்டுக்காக விரைவில் திறந்து விடப்பட உள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் ராஜகோபுரம், 234 அடி உயரத்தில், தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப்பெரிய கோபுரம் என்ற பெருமையை பெற்றது. ராஜகோபுரத்தில் அழகை ரசிக்கும் வகையிலும், ராஜகோபுரம் முன் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. உலக பிரசித்திப்பெற்ற ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில், ஐந்து லட்சம் பக்தர்கள் பங்கேற்பர், என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் எளிதாக வந்து செல்ல வழிவகை செய்ய, ராஜகோபுரம் முன் உள்ள, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை கைப்பற்றி, அதை பக்தர்கள் பயன்பாட்டுக்கு விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் உள்ள டெலிஃபோன் கம்பங்கள், ராஜகோபுரம் முன் உள்ள, நான்கு மண்டபத்தில் இருந்த கடை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள், நேற்று காலை அதிரடியாக அகற்றப்பட்டது.
மாநகராட்சி உதவியுடன், திருச்சி நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ராஜசேகரன் தலைமையில், உதவி கோட்ட பொறியாளர் ஜெயச்சந்திர சூரிய நாராயணன், உதவி பொறியாளர் சிட்டி பாபு, சாலை ஆய்வாளர் செல்வவிநாயகம் மற்றும் பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் உள்ள, நான்குகால் மண்டபத்தில் இருந்து, ஸ்ரீரங்கம் பஸ்ஸ்டாப் வரையிலான, 175 மீட்டர் நீளம், எட்டு மீட்டர் அகலம் உள்ள மாநில நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், 15 லட்ச ரூபாய் செலவில் சிமென்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கம் போலீஸ் ஸ்டேஷனுக்காக செய்யப்பட்டுள்ள, மூன்று மீட்டர் ஆக்கிரமிப்பும், கோவில் நிர்வாகம் சார்பில், இரண்டு மண்டபங்களில் கடைகளுக்கு குத்தகை விடப்பட்டுள்ளதும், சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இவை உடனடியாக சரி செய்யப்பட்டால், வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்குள் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டுவிடும். சாலை அமைத்து, மண்டபத்தில் உள்ள கடைகளும் காலி செய்யப்பட்டு விட்டால், மூன்று, நான்குகால் மண்டபமும் மக்கள் பயன்பாட்டுக்காக விடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.