கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவில்களில் கார்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் வினாயகர், வள்ளி தெய்வானை முருகன், சிவன், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ருத்ர மந்திரங்கள் வாசித்து வில்வ இலைகளை கொண்டு பூஜைகள் செய்தனர். அலங்கார தீபங்கள் காண்பிக்கப்பட்டது. பெண்கள் தீபம் ஏற்றி வழிபட்டனர். மகா தீபாராதனை நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலிலும் கார்த்திகை சோமவார ஆராதனை வைபவம் நடந்தது. திருவண்ணாமலை கோபாலன் ருத்ர மந்திரங்களை வாசித்தார். சிவ பக்தர்கள் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாடினர். சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சோமவார நிகழ்ச்சிறையொட்டி 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. மூலவருக்கு 16 வகையான அபிஷேகம் செய்து வைக்கப்பட்டு, காகபுஜாண்டவர் சன்னதியில் யாக பூஜையும், தொடர்ந்து சுவாமிக்கு அண்ணாமலை அலங்காரம் செய்து வைத்து மகா தீபாரதனைகள் நடந்தது.பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். அறங்காவலர் இளங்கோவன் தலைமையில் பூஜைகள் செய்து வைக்கப்பட்டது.