பதிவு செய்த நாள்
08
ஏப்
2025
05:04
பல்லடம்; பல்லடம் அருகே, சிங்கனூர் கொண்டத்து வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா விமரிசையாக நடந்தது.
பல்லடத்தை அடுத்த, கணபதிபாளையம் ஊராட்சி, சிங்கனூர் கிராமத்தில் கொண்டத்து வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளது. இதன், 21ம் ஆண்டு குண்டம் திருவிழா, மார்ச் 13 அன்று பூ கேட்டல் நிகழ்வுடன் துவங்கியது. தொடர்ந்து, 28ம் தேதி பூச்சாட்டுதல், ஆயக்கால் போடுதல் நிகழ்வுகள் நடந்தன. ஏப்., 2ம் தேதி, கிராம சாந்தி, கொடியேற்றத்துடன் குண்டம் திருவிழா துவங்கியது. இதனையடுத்து, வசந்த விழா, சீர்வரிசை கொண்டு வருதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், அம்மன் திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்தன. நேற்று காலை, 7.00 மணிக்கு, குண்டம் திறப்பு பூப்போடுதல், பூவோடு எடுத்தல், வேல் கழுவுதல், அம்மை அழைத்தல் நடைபெற்றது. இன்று காலை, 7.00 மணிக்கு குண்டம் பூ மிதித்தல் நிகழ்வு நடந்தது. ஓம் சக்தி பராசக்தி என்ற கோஷம் முழங்க பெண்கள், தாய்மார்கள், சிறுவர் சிறுமியர், இளைஞர்கள் இளம்பெண்கள் என, நூற்றுக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செய்தனர். வெண்ணை காப்பு அலங்காரத்தில் கொண்டத்து வன பத்திர காளியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை மறுபூஜை அபிஷேகம், மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்டவை நடைபெற உள்ளன.