பதிவு செய்த நாள்
09
ஏப்
2025
01:04
அழகர்கோவில்; அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் சித்திரைத் திருவிழா மே 8ல் துவங்கி மே 17 வரை நடக்கிறது. மே 8, 9ல் கோயிலுக்குள் சுவாமி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கும்.
மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக மே 10 மாலை 6:00 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். மே 12 ல் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். மே 13ல் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சேஷ வாகனத்தில் புறப்பாடு, கருட வாகனத்தில் தேனுார் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். மே 14 ல் மோகினி அவதாரத்தில் காட்சியளித்து, மதியம் ராஜாங்க அலங்காரத்தில் அனந்தராயர் பல்லக்கில் சேதுபதி மண்டபம் புறப்படுவார். இரவில் பூப்பல்லக்கு அலங்காரம் நடக்கும். மே 15 ல் அழகர்கோவிலுக்கு புறப்பாடாகி, மே 17 ல் உற்ஸவ சாற்றுமுறை நடைபெறும். இதை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் முகூர்த்த கால் நடும் விழா, ஆயிரம் பொன் சப்பரம், தலையலங்காரம் நிகழ்ச்சிகள் ஏப். 27 ல் காலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள் நடக்க உள்ளது. தொடர்ந்து வண்டியூர் வைகையாற்றில் உள்ள தேனுார் மண்டபத்தில் முகூர்த்தகால் நடும் விழா காலை 11:00 மணி முதல் 12:00 மணிக்குள் நடக்க உள்ளது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.