பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
11:04
‘சிவபெருமானை வழிபடுவதால் கிடைக்கும் பலன், சிவப்பணி ஆற்றிய சிவனடியார்களை வழிபட்டாலும் கிடைக்கும்’ என்று, திருத்தொண்டர்தொகை இயற்றிய சுந்தரமூர்த்தி சுவாமிகளும், பெரியபுராணம் இயற்றிய சேக்கிழாரும் குறிப்பிட்டுள்ளனர். நாயன்மார்கள், 63 பேரையும், ஒன்பது தொகையடியார்களையும்சிவனடியார்களாகப் போற்றி வழிபடுகிறோம். அனைத்து சிவாலயங்களிலும் பிரம்மோத்சவத்தின்போது, அறுபத்து மூவர் விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மயிலையில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா தனிச்சிறப்பு கொண்டதாகத் திகழ்கிறது. தொண்டர் தம் பெருமையை உலகத்தவர்க்கு உணர்த்த சிவபெருமானும், அம்பிகையும் அருளாடல் நிகழ்த்திய புனிதத் தலமாக மயிலை விளங்குகிறது. கயிலையில் சிவபெருமான் அம்பிகைக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அழகிய மயில் ஒன்றின் அழகில் தன்னை மறந்து லயித்துவிட்டாள் அம்பிகை. இதில், சிவன் கொண்ட சினத்தால் பிரிந்து சென்றார் தேவி. அவரின் பிரிவைத் தாங்காமல் ஈசனும், தேவி மயிலாக வாழ்ந்த இடத்தில் இருந்த புன்னை மரத்தின் அடியில் லிங்க வடிவில் எழுந்தருளினார்.
அவருக்கு மயில் வடிவில் இருந்த தேவி அலகினால் மலர்களையும், கனிகளையும் எடுத்து வந்து சிவபெருமானுக்கு சிவ தொண்டராக அர்ப்பணித்தாள். பின், அன்னைக்குக் சிவபெருமான் காட்சியளித்ததால் தேவி சுய உருவம் பெற்றார். அம்பிகையின் வாயிலாக தொண்டர்களின் பெருமையை ஈசன் உணர்த்திய தலம் என்பதால்தான், மயிலை அறுபத்து மூவர் விழா தனிச்சிறப்பு பெற்று கொண்டாடப்படுகிறது. அறுபத்துமூவர் விழா நடைபெறும் நாளில், சிவனடியாரின்மகத்துவம் உணர்த்தும் மற்றுமொரு வைபவமும் நடைபெறுகிறது. அதுதான் திருஞானசம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்தெழச் செய்த வைபவம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை, 63 நாயன்மார்களும் முன்செல்ல, வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரர் எழுந்தருளி மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.
சிறப்பு அன்னதானம்; இந்த விழாவைமுன்னிட்டு, காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் மயிலாப்பூர் மாட வீதிகள், சுற்று வட்டாரப் பகுதிகளில் சில கி.மீ., துாரம் வரை உணவுப் பொட்டலங்கள், பானகம், மோர், விசிறி, பிஸ்கட்டுகள், இனிப்புகள் ஆகியவற்றை வழங்குவார்கள். அறுபத்து மூவர் விழாவைஅடுத்து, இரவு பார்வேட்டைக்கு சந்திரசேகரர் எழுந்தருளல் நிகழ்ச்சியும் பஞ்ச மூர்த்திகள் வீதியுலாவும் நடைபெறும்.