பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
11:04
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நடக்கும் பங்குனிப் பெருவிழாவில், அறுபத்து மூவர் உற்சவத்தில் மிகவும் சிறப்புடை ஒன்று பூம்பாவையை உயிர்ப்பித்தல் நிகழ்வு.
ஏழாம் நுாற்றாண்டில், சிவனேசன் என்ற வணிகர்மயிலாப்பூரில் வசித்து வந்தார். அவர் தன் மகள் பூம்பாவை மீது, பேரண்பு கொண்டிருந்தார். அவளை சிறந்த சிவனடியாரான திருஞான சம்பந்தருக்கு மணம் முடிக்கவும் விரும்பினார்.
ஒரு நாள் பூம்பாவை நந்தவனத்தில் மலர்களை பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, நாகம் ஒன்று தீண்டியதால் இறந்துபோனாள். பூம்பாவையின் உடலை தகனம் செய்த சிவனேசன், மகளின் எலும்பு, சாம்பல் ஆகியவற்றை ஒரு மண் குடத்தில் வைத்து பாதுகாத்து வந்தார்.
சிறிது காலத்திற்கு பின், திருஞான சம்பந்தர் கபாலீஸ்வரரை தரிசிக்க மயிலை வந்தார். அப்போது, சிவனேசன் தனது விருப்பத்தையும், மகளின் நிலையையும் சம்பந்தரிடம்எடுத்து கூறினார்.
இதைக்கேட்டு, வருத்த மடைந்த திருஞான சம்பந்தர், கபாலீஸ்வரரைமனதில் நினைத்து, ‘மட்டிட்ட புன்னையங்கானல் மாடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீசரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு அட்டிட்டல் காணாதே போதிய பூம்பாவாய்...’ எனத் தொடங்கும், 11 பதிகங்கள் மனமுருகப் பாடினார். இதில், மனம் குளிர்ந்த இறைவனின் அருளால், மண்பானையில் அஸ்தியாகஇருந்த பூம்பாவை உயிர்த்தெழுந்தாள். சம்பந்தரிடம், தன் மகளை திருமணம் செய்யும்படி, சிவனேசன் வேண்டினார். ஆனால், பூம்பாவையை மீண்டும் உயிர்ப்பித்து கொடுத்ததால்,அவளுக்கு தான் தகப்பனாகிப் போனதாக கூறி, சம்பந்தர் மறுத்துவிட்டார்.
இந்நிகழ்வு, கபாலீஸ்வரர் கோவில் பங்குனிப் பெருவிழாவின் பிரதான நிகழ்வான அறுபத்து மூவர் உற்சவத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறது.