பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
05:04
திருப்புவனம்; திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது தினசரி அம்மனும் சுவாமியும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தந்தனர். நேற்று காலை நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்த நிலையில், இன்று தேரோட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு தேர்களுக்கும் மூன்று லட்ச ரூபாய் செலவில் புதிய தேர் அலங்கார துணிகளில் 36வது திருவிளையாடல் நடந்த இடம் என்பதை குறிக்கும் படங்கள் நெய்யப்பட்டு பொருத்தப்பட்டிருந்தன. சிறப்பு பூஜைக்கு பின் பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நிலையை விட்டு காலை 9:30 மணிக்கு கிளம்பியது. நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வந்து மதியம் 12:30 மணிக்கு நிலையை வந்தடைந்தது. தேர் நிலைக்கு முன்பு மரக்கிளையில் தேர் சிக்கியதால் தேரோட்டம் சிறிது நேரம் தடைபட்டது. தேர் நிலையை வந்தடைந்ததை அடுத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தர்கள் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சூறை விட்டார். தேரோட்டத்தை முன்னிட்டு மானாமதுரை டி.எஸ்.பி., நிரேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், எஸ் ஐ., சிவப்பிரகாசம் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். நான்கு ரத வீதிகளிலும் பக்தர்களுக்கு நீர்மோர் பந்தல், சர்பத், அன்னதானம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் தண்ணாயிரம் மற்றும் கிராமத்தார்கள் செய்திருந்தனர்.