பதிவு செய்த நாள்
11
ஏப்
2025
01:04
கோவை ; ராம்நகர் கோதண்ட ராமர் கோவிலில் சீதாராமர் திருக்கல்யாணம் நடந்தது. இதில் சிறப்பு அலங்காரத்தில் சீதாதேவி, கோதண்டராமர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
கோவை கோதண்ட ராமர் கோவிலில் பங்குனி உத்திர விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று காலை 11 மணிக்கு சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் கங்கனதாரணம், பாதிகாவந்தனம் என்றழைக்கும் முளைப்பாரி இடுதல், ஜானவாசம் எனும் காசியாத்திரை செல்லுதல், மாப்பிள்ளை அழைப்பு ஸ்ரீராமருக்கு புதிய வஸ்த்திரம் சமர்பித்தல், யாகசாலையில் அக்னி பிரவேசிக்கசெய்து பிரதானஹோமத்தை வேதவிற்பன்னர்கள் துவங்கினர். பின்னர் சீதா சமேத கோதண்ட ராமர் பட்டாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளினார். தொடர்ந்து திருமாங்கல்ய பூஜையும், திருமாங்கல்ய தாரணமும், சப்தபதியும் நடந்தது. சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வாரணமாயிரம் பாசுரம் சேவித்து, பூப்பந்து வீசுதல் மற்றும் தேங்காய் உருட்டும் வைபவங்கள் நடந்தது. திருமண வைபவத்திற்கு வந்த பக்தர்கள் மொய்ப்பணம் சமர்பித்தனர்.