அன்னூர்; குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான வட்டமலை ஆண்டவர் கோவிலில் 16ம் ஆண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த 6-ம் தேதி கிராம தேவதை வழிபாடுடன் துவங்கியது. நேற்று காலையில் யாகசாலை பூஜை நடந்தது. மாலை 5:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இன்று காலை 8:00 மணிக்கு வட்டமலை ஆண்டவர் தேரில் எழுந்தருளினார். காலை 10:35 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. முன்னதாக சிறிய விநாயகர் தேரும், இதையடுத்து வட்டமலை ஆண்டவர் தேரும் சென்றன. தேருக்கு முன்னதாக ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தபடி முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். ஜமாப் குழு, மோளகாளிபாளையம் காவடி ஆட்டம் மற்றும் கயிலை வாத்தியம் இசைக்கப்பட்டது. தேரோடும் வீதியில் பக்தர்களுக்கு நீர் மோர் மற்றும் குளிர்பானம் வழங்கப்பட்டது. மதியம் 1:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இதையடுத்து வட்டமலை ஆண்டவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. அன்னூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.