பதிவு செய்த நாள்
12
டிச
2012
10:12
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆயிரங்கால் மண்டபம் அமைந்துள்ள வீரவசந்தவராய மண்டபத்தில், விரிசல் தூண்களை அகற்றும் பணி நேற்று துவங்கியது. நான்கு மாதத்திற்குள், புதிய கல்தூண்கள் பொருத்தப்படவுள்ளன. இக்கோயில் கும்பாபிஷேகத்தின்போது, விடுபட்டு போன சில பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடக்கின்றன. செப்.,26ல், பொற்றாமரைக்குள தென்கிழக்கு மூலை மண்டபத்தில், பழுதான 72 கல்தூண்களுக்கு பதில், ரூ.3.50 கோடியில் புதிதாக பொருத்தும் பணி துவங்கியது. இதேபோல், கிழக்கு கோபுரத்திலிருந்து ஆயிரங்கால் மண்டபத்திற்கு செல்லும் வழியில் உள்ள வீரவசந்தவராயர் மண்டபத்தில், 10க்கும் மேற்பட்ட தூண்கள் விரிசல் அடைந்துள்ளன. இரும்பு கம்பிகளை கொண்டு "முட்டு கொடுக்கப்பட்டுள்ளன. இக்கற்களை அகற்றி, ரூ.29 லட்சத்தில் புதிய தூண்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக கர்நாடகா மாநிலம் கொய்லாராவில், கற்கள் எடுக்கப்படுகின்றன. நேற்று, விரிசல் தூண்களை அகற்றும் பணி துவங்கியது. இதற்காக, சில கடைகள் பாதுகாப்பு கருதி, தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன. அதிகாரி ஒருவர் கூறுகையில் பக்தர்களுக்கும், கடைக்காரர்களுக்கும் இடையூறு இன்றி, இப்பணி நடக்கிறது. புதிய கற்களை பொருத்தும் பணி 4 மாதத்தில் முடியும், என்றார்.