பதிவு செய்த நாள்
12
டிச
2012
10:12
சபரிமலை: சபரிமலையில், வரும் 26ம் தேதி, மண்டல பூஜை நடக்கிறது. இதற்காக, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து, தங்க அங்கி பவனி, 22ம் தேதி காலை 7:00 மணிக்கு புறப்படுகிறது. சபரிமலையில், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், தொடர்ந்து, 41 நாட்கள் நடக்கும் பூஜைகளின் நிறைவாக, மண்டல பூஜை நடக்கும். வரும், 26ம் தேதி, பகல் 12:30 மணிக்கு, இந்த பூஜை நடக்க உள்ளது. ஐயப்பனுக்கு அணிவிக்க, திருவிதாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் மகாராஜா, 427 பவுன் தங்க அங்கியை, காணிக்கையாக வழங்கினார். இந்த அங்கி ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. ரதத்தில் தங்க அங்கி வைக்கப்பட்டு, வரும், 22ம் தேதி, காலை 7:00 மணிக்கு, பவனியாக எடுத்து வரப்படும். முதல் நாள், ஓமல்லூர் ரத்தகண்டேஸ்வரர் கோவில்; இரண்டாம் நாள், கோந்நி முருங்கமங்கலம் கோவில்; மூன்றாம் நாள், பெருநாடு சாஸ்தா கோவிலில் ரதம் நிறுத்தப்படும். 25ம் தேதி, மதியம், ரதம் பம்பை வரும். பேடகத்தில் அங்கி வைக்கப்பட்டு, ஐயப்பா சேவா சங்கத்தினர் தலைச்சுமையாக கொண்டு வருவர். மாலை 6:00 மணிக்கு, சன்னிதானம் வரும் அங்கியை, தந்திரி கண்டரரு ராஜீவரரு பெற்று, ஐயப்பனுக்கு அணிவித்து, ஆராதனை நடத்துவார். 26ம் தேதி, மண்டல பூஜை அன்றும், ஐயப்பனுக்கு அங்கி அணிவிக்கப்படும்.சபரிமலையில் கடந்த இரண்டு நாட்களாக தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.