பதிவு செய்த நாள்
18
ஏப்
2025
04:04
குன்னூர்; குன்னூரில், 80வது ஆண்டு முத்துப்பல்லக்கு உற்சவ விழாவில் சயன கோலத்தில் அம்மன் பவனி நடந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது. முக்கிய விழாவான முத்துப்பல்லக்கு ஊர்வலம் இன்று நடந்தது. விழாவில் குன்னூர் வி.பி. தெரு சிவசுப்ரமணிய சுவாமி கோவிலில் இருந்து பஞ்சவாத்தியம், சிங்காரி மேளம் முழங்க, பூக்காவடி, பால்காவடி, சிங்காரி மேளம், தேவி ரக்ஷா மற்றும் முத்துகாளைகளுடன், துவங்கிய கும்ப கலசம் மற்றும் அபிஷேக பொருட்கள் ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு அபிஷேகம் அலங்கார, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து மாலையில் அம்மன் திருவீதி உலாவில், அம்மன் சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி, சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம் , சிவா கலாரூபம், சிவன் அனுமன் கலாரூபநிர்த்தம், காளி நிர்த்தம், முத்துரத காளை, ராட்சத செயற்கை யானை, இன்னிசை நிகழ்ச்சி, வானவேடிக்கை உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. பரதநாட்டியம் நடந்தது. சிவன், பார்வதி மற்றும் கொடுங்கலூர் அம்மன் வேடத்துடன் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, குன்னூர் தந்தி மாரியம்மன் கேரள சேவா சங்க நிர்வாகிகள், விழா குழுவினர் செய்தனர்.