பள்ளிப்பட்டு; பள்ளிப்பட்டு அடுத்த பொம்மராஜிபேட்டையில் அமைந்துள்ளது, திரவுபதியம்மன் கோவில். இந்த கோவிலில், தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. திருவிழாவை ஒட்டி, ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 9ம் தேதி, திரவுதியம்மன் திருக்கல்யாணம் நடந்தது. அதைத் தொடர்ந்து, 10ம் தேதி பகாசூரன் கும்பம் திருவிழாவுடன், தெருக்கூத்து நிகழ்ச்சி ஒரு வாரமாக நடந்து வருகிறது. தினசரி மகாபாரத சொற்பொழிவும் நிகழ்த்தப்படுகிறது. திருவிழாவின் 16ம் நாளான இன்று காலை 9:00 மணிக்கு அர்ச்சுனன் தபசு நிகழ்ச்சி நடந்தது. மகாபாரத யுத்தத்தில் கவுரவர்களை வெற்றி கொள்வதற்காக, அர்ச்சுனன், பாசுபத அஸ்திரம் வேண்டி நடத்திய தபசு நிகழ்ச்சியை, தெருக்கூத்து கலைஞர்கள் நடத்தி காட்டினர். இதற்காக கோவில் வளாகத்தில் நடப்பட்டிருந்த பனைமரத்தில் ஏறி நின்று, அர்ச்சுனன் வேடம் தரித்த தெருக்கூத்து கலைஞர், தபசு நடத்தினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 20ம் தேதி காலை துரியோதனன் படுகளம் நிகழ்வும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழாவும் நடக்க உள்ளது.