பதிவு செய்த நாள்
25
ஏப்
2025
12:04
அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களுக்கு உதவுவதற்காக, புதுமையான மொபைல் செயலியை உருவாக்கியுள்ளார், தொழில்நுட்ப வல்லுநரான, வி.வி.சுப்பிரமணியம். ஆறு மாதத்தில் உருவாக்கியுள்ள, அந்தச் செயலியில் உள்ள வசதிகள் குறித்து அவர் கூறியதாவது: சிரமத்தில் இருக்கும் பலர், ஜாதகம் பார்க்கச் செல்லும்போது, ஒரு பிரச்னையை ஜோதிடரிடம் சொல்வர். அதற்கு அவர், ‘நீங்கள் உங்கள் முன்னோர்களை உரிய வகையில் திருப்தி செய்யவில்லை; தர்ப்பணம் கொடுக்கவில்லை; அதனால்தான், இத்தகைய சிரமங்களை சந்திக்கிறீர்கள்’ என்பார். சிலர், ‘ஆடி அமாவாசைக்கு மட்டுமே தர்ப்பணம் கொடுப்பேன்’ என்பர். அதுவும் கூட்டமாக பலருடன் சேர்ந்து, ஏதேனும் ஒரு குளக்கரையிலோ, நதியின் ஓரத்திலோ போய் கொடுப்பர் அல்லது தர்ப்பணமே கொடுக்காமலும் இருப்பர்.
வேறு சிலரோ தங்களுக்கு போதிய விபரம் தெரியவில்லை என்ற காரணத்தினால், தர்ப்பணம் கொடுக்காமல் இருப்பர். இதுதவிர, சிலருக்கு அப்பா இருக்க மாட்டார்; ஆனால், அம்மா இருப்பார். தாத்தா இருப்பார், பாட்டி இருக்க மாட்டார். இவர்கள் தர்ப்பணம் செய்யும்போது, யாருக்கு உரிய மந்திரங்களை சொல்ல வேண்டும் என்ற குழப்பமும் வரும். பலருக்கு மூன்று தலைமுறையை சேர்ந்தவர்களின் பெயர்கள் தெரியாது. இப்படிப்பட்டவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தில், ‘அமா சர்வமங்களா’ என்ற, மொபைல் செயலியை உருவாக்கியுள்ளேன். இதில், எல்லாவற்றையும் எளிமையாகக் கொடுத்திருக்கிறேன். இச்செயலியை தரவிறக்கம் செய்து, பதிவு செய்ய உள்ளே நுழையும்போதே, பயனர் சைவமா, வைணவமா என்று கேட்கப்படும். அதற்கேற்ப, ‘டிக்’ செய்தால் போதும். சைவம் என்றால் தமிழ், தெலுங்கு, கன்னட சம்பிரதாயமா, வைணவம் என்றால் வடகலையா, தென்கலையா என்று கேட்கப்படும்.
அதேபோல, வேதம் என்ன, கோத்திரம் என்ன என்ற தகவல்களும் கோரப்படும். பின், தந்தை வழியிலும், தாய் வழியிலும் மூன்று தலைமுறையினரின் பெயர்கள் கேட்கப்படும். அதில், யார் யாரெல்லாம் உயிரோடு இருக்கின்றனர்; உயிரோடு இல்லை என்ற தகவலும் திரட்டப்படும். இந்த தகவல்களை ஒட்டி, அவரவருக்கு ஏற்ப பிரத்யேகமான தர்ப்பண மந்திரங்களும், அவற்றைச் சொல்லும்போது செய்ய வேண்டிய கிரியைகளையும் விவரித்து, பி.டி.எப். கோப்பு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு அமாவாசைக்கு மட்டுமல்லாது, மாதப்பிறப்பு தர்ப்பணத்துக்கும் இந்த, பி.டி.எப்., மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அந்தணர், அந்தணர் அல்லாதோர் என, அனைவரும் பயன்படுத்தும் வகையில், இந்த மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த தை மாதம் இதன் தமிழ் வடிவம் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், இதன் ஆங்கில வடிவமும் வெளியிடப்படும். இந்த மொபைல் செயலி இலவசமானது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள் போன்களில் இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். ama sarvamangala என்று கூகுள் பிளேஸ்டோரிலோ, ஆப்பிள் ஆப் ஸ்டோரிலோ போய் தேடி இதனைப் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு சுப்பிரமணியம் கூறினார்.