ஒரு இறைவனுக்கு ஆசுதோஷி என்று பெயர் இருக்கிறது. யார் அவர், கேள்விப்பட்டதே இல்லையே என்பவர்கள் ஆசுதோஷியின் அர்த்தத்தைத் தெரிந்து கொள்ளுங்கள். பக்தர்களின் எளிய பிரார்த்தனைக்குக் கூட மகிழ்ச்சி அடைந்து விரைவில் அருள்புரிபவர் என்பது இதன் பொருள். இந்த இறைவன் வேறு யாருமல்ல! நமது சிவபெருமான் தான். இவருக்கு ஆசுதோஷி என்ற சிறப்புப் பெயருண்டு. வந்தி என்னும் மூதாட்டியின் எளிய பிரார்த்தனையை ஏற்று, அவருக்காக மண் சுமக்க மதுரை வந்தார். மற்ற தலங்களில் சிவனின் திருப்பாதம் மண்ணில் பட்டது. ஆனால், மதுரை மண்ணைச் சிவனே தன் தலையில் சுமந்து வைகைக்கரையை சரி செய்தார். அத்துடன் மதுரை மண்ணை அரசாட்சியும் செய்தார். இவரது தேவியான மீனாட்சி சந்நிதியில் வழிபட்ட பின்னரே, சுந்தரேஸ்வரர் என்னும் பெயர் கொண்ட இவரது சந்நிதிக்குச் செல்லும் வழக்கம் இருக்கிறது.