பதிவு செய்த நாள்
03
மே
2025
10:05
நாகப்பட்டினம்; பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மாரியம்மன் சுமந்து வந்த, ஐம்பொன் கலசத்தில் தூவிய பூக்களை, மடியேந்தி பிரசாதமாக பக்தர்கள் பெற்றுக்கொண்டனர்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா 20,ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வெகு விமர்சையாக தொடங்கியது. 1,மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவின் பூச்சொரிதல் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. காக்கா பிள்ளையார் கோயிலிருந்து புறப்பட்ட பூச்சொரிதல் விழாவில், மேளதாளம் முழங்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அம்மனுக்கு பூதட்டு ஏந்தியவாறு நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் வரை ஊர்வலமாக சென்றனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தை சென்றடைந்த பக்தர்கள், அங்கு தங்களது நேர்த்திக்கடன் நிறைவேற்றும் விதமாக அம்மன் காலடியில் நெல்லை சமர்ப்பித்து பின்னர் மாரியம்மனுக்கு பூவால் அபிஷேகம் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து யாகசாலையில் பூஜிக்கப்பட்ட ஐம்பொன் கலச ஊர்வலம் நடைபெற்றது. கோவிலை சுற்றி மாரியம்மன் சுமந்து வந்த ஐம்பொன் கலசத்தில் தூவிய பூக்களை, கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மடியேந்தி பிரசாதமாக பெற்றுக்கொண்டு வழிபாடு செய்தனர்.