பழநி: பழநி கோயில் ரோப்கார் சேவை மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. பராமரிப்பு பணி காரணமாக, கடந்த ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோப் கார், புதிய இரும்பு வடக்கயிறு பொருத்தப்பட்டு, இன்று முதல் இயக்கப்படுகிறது. சீனாவில் இருந்து வாங்கப்பட்ட இரும்பு வடக்கயிறை பொருத்தியதால், ரோப்காரில் இருந்து சத்தம் வந்தது. இதனால், இரும்புகயிறை மாற்ற முடிவு செய்யப்பட்டு, கடந்த அக்., 20 ல் ரோப்கார் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியிலிருந்து 720 மீட்டர் நீளமுள்ள புதிய இரும்பு வடக் கயிறு கொண்டுவரப்பட்டது. இதை பொருத்தும் பணி 6 நாட்களாக நடந்தது. ஒவ்வொரு ரோப்கார் பெட்டியிலும் 300 கிலோ கற்கள் வைக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நடந்தது. சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததையடுத்து, ரோப்கார் இன்று முதல் மீண்டும் பக்தர்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.