பதிவு செய்த நாள்
13
டிச
2012
10:12
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று கோலாகலமாக துவங்குகிறது. விழாவுக்காக, ஆயிரங்கால் மண்டபம் முன் தகரக்கொட்டகை அமைத்தது, திடீர் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடக்கும், திரு அத்யயன உற்சவம் எனப்படும், வைகுண்ட ஏகாதசி திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. பகல் பத்து, ராப்பத்து என, தொடர்ந்து, 21 நாள் திருவிழா நடக்கும். நடப்பாண்டு, வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று துவங்கி, ஜனவரி, 3ம் தேதி வரை நடக்கிறது. பகல்பத்து நாட்களில், திருமொழி பாசுரம், ராப்பத்தில், திருவாய்மொழி பாசுரங்கள், அபிநயங்கள், வியாக்னத்துடன் அரையர்களால் சேவிக்கப்படும்.
சொர்க்கவாசல் திறப்பு: வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான, திருநெடுந்தாண்டகம், இன்றும், பகல்பத்து நாளையும், மோகினி அலங்காரம், வரும், 23ம் தேதியும், சொர்க்கவாசல் என்ற பரமபத வாசல் திறப்பு, 24ம் தேதி அதிகாலை, 4.45 மணிக்கும் நடக்கிறது. அன்று காலை, 4.45 மணி முதல், இரவு, 10 மணி வரை, சொர்க்கவாசல் திறந்திருக்கும்.
திடீர் சர்ச்சை: திருமாமணி மண்டபத்தில் தங்கக்குதிரையில் நம்பெருமாள் எழுந்தருள்வதால், ஆயிரங்கால் மண்டபம் சொர்க்கமாக மாறும் என்பது ஐதீகம். ஆனால், "பூலோக சொர்க்கம் அழியக்கூடியது என்பதால், நம்பெருமாள் எழுந்தருளக்கூடிய, ஸ்ரீரங்கம் ஆயிரங்கால் மண்டபத்தில், 960 தூண்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. இதனால், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின்போது, ஆயிரங்கால் மண்டபத்திற்கு வெளியே, புதிதாக வெட்டப்பட்ட, 40 தென்னை மரங்களை ஊன்றி, புதிய தென்னங்கீற்றுகளை கொண்டு, பிரம்மாண்ட பந்தல் அமைப்பது வழக்கம்."பூலோக சொர்க்கம் அழியக்கூடியது என்ற ஐதீகத்தின் அடிப்படையில், விழாமுடிந்த பிறகு, மரங்களும், கீற்றுகளும் அகற்றப்படும். ஆனால், தற்போது, 40 தென்னை மரங்கள் ஊன்றப்பட்ட நிலையில், கீற்றுகளுக்கு பதிலாக, தகரக் கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் ஒழுகு என்று உடையவரால் முழுமையாக ஒழுங்கமைப்பட்ட நடைமுறைகளே, ஆயிரம் ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் கோவிலில் கடைபிடிக்கப்படுகிறது. அதற்கு மாறாக, இந்து சமய அறநிலையத்துறையினர் செயல்படுவது கண்டித்தக்கது என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.இதுகுறித்து கோவில் நிர்வாக வட்டாரத்தில் விசாரித்தபோது, "கோவில் நடைமுறைகளை மீறுவது எங்களது நோக்கமல்ல. கோவில் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே, எளிதில் தீ பிடிக்காத வகையில், தகரக்கொட்டகை அமைக்கப்படுகிறது என்கின்றனர்.
உயரதிகாரி கைங்கர்யம்: செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசுச் செயலாளராக ராஜாராம் உள்ளார். தி.மு.க.,வின் தீவிர ஆதரவாளர் என, அவருடன் பணியாற்றும் அதிகாரிகளால் வர்ணிக்கப்படுபவர். இவரின், தன்னிச்சையான செயல்பாடுகளால், பல்வேறு கோவில்களை சேர்ந்த, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் நித்ய அன்னதான திட்டம் முழுமையாக செயல்படாதது, வைகுண்ட ஏகாதசி விழாவில், கீற்றுக்கொட்டகைக்கு பதில் தகரக்கொட்டகை அமைக்கப்பட்டது, வி.ஐ.பி., பாஸ் ரத்து செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குளறுபடிகளுக்கு இவர் தான் காரணம் என, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அவரது வாய்மொழி உத்தரவுப்படியே, அனைத்தும் நடப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.மேலும் மூன்று துறைகளை, அவர் தன் வசம் வைத்துள்ளதால், எந்த துறையிலும் முழுகவனம் செலுத்தாமல் உள்ளார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது.