பதிவு செய்த நாள்
09
மே
2025
08:05
வாடிகன்; அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரீவோஸ்ட், 69, புதிய போப் ஆக நேற்று தேர்வு செய்யப்பட்டார். உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ், 88, இத்தாலியின் வாடிகன் சிட்டியில் கடந்த மாதம் 21ம் தேதி காலமானார்.
இதையடுத்து, புதிய போப் தேர்வுக்கான நடைமுறைகளை கத்தோலிக்க திருச்சபை துவங்கியது. போப் தேர்வு செய்யப்பட்டார் என்பதை சிஸ்டைன் தேவாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கியில் வெளியாகும் புகையின் நிறத்தை கொண்டு மட்டுமே அறிந்துக்கொள்ள முடியும். புகை போக்கியில் கறுப்பு நிற புகை வெளியானால் போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், வெள்ளை நிற புகை வெளியானால் புதிய போப் தேர்வு செய்யப்பட்டார் என்றும் அர்த்தம். இந்நிலையில், போப்பின் அதிகாரப்பூர்வ இல்லமான அப்போஸ்தலிக் அரண்மனையில் உள்ள சிஸ்டைன் சேப்பலில், 80 வயதுக்குட்பட்ட அனைத்து கார்டினல்களும் கடந்த இரண்டு நாட்களாக ரகசிய வாக்கெடுப்பில் பங்கேற்றனர். இரண்டு கட்டங்களாக நடந்த தேர்வில், புதிய போப் தேர்வு செய்யப்படாத நிலையில், நேற்றிரவு மீண்டும் ரகசிய ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. இதில், புதிய போப் தேர்வு செய்யப்பட்டார். அதை குறிக்கும் வகையில் இரவு 10:00 மணிக்கு புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியது. புதிய போப் ஆக அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் ப்ரீவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டார். கத்தோலிக்க திருச்சபையின், 2,000ம் ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்தவர் போப் ஆக தேர்வாவது இதுவே முதன்முறை.