பதிவு செய்த நாள்
12
மே
2025
10:05
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, ௨௦ லட்சம் பக்தர்கள் குவிந்தனர். கிரிவலம் சென்று, 7 மணி நேரம் வரிசையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரரை தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டத்தால் திருவண்ணாமலை ஜனத்திரளில் மிதந்தது.
திருவண்ணாமலையில் உள்ள, 2,668 அடி உயர மலையையே பக்தர்கள் சிவனாக வழிபட்டு வரும் நிலையில், மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கானோர் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபடுகின்றனர். இதில், கார்த்திகை மற்றும் சித்திரை மாத பவுர்ணமி தினத்தில் மட்டும், வழக்கத்தை விட பல மடங்கு பக்தர்கள் வருவர். இந்நிலையில், சித்திரை மாத பவுர்ணமி திதி நேற்றிரவு, 8:48 மணி முதல், இன்று இரவு, 10:44 மணி வரை உள்ளது. இதனால், நேற்றிரவு முதலே பக்தர்கள் கிரிவலம் தொடங்கினர். லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், திருவண்ணாமலையே பக்தர்கள் கூட்டத்தில் மிதந்தது. பக்தர்களின் வசதிக்காக, 20 தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்து, பல்வேறு பகுதிகளிலிருந்து, 4,533 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 12,360 கார்கள் நிறுத்த வசதியாக, 73 பார்க்கிங் அமைக்கப்பட்டிருந்தது. கூடுதலாக, 8 சிறப்பு ரயில்கள், மூன்று நாட்களுக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில், 5,197 போலீசார் ஈடுபட்டுள்ளனர். 15 தீயணைப்பு வாகனங்களுடன், 200 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக, கோவில் வளாகம், கிரிவலப்பாதை, நகரின் முக்கிய பகுதிகளில், 659 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, நான்கு இடங்களில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. 50 ரூபாய் கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, இலவச தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள், 7 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில், நீர் மோர், கடலை உருண்டை, பிஸ்கட், தண்ணீர் பாட்டில் வழங்கப்பட்டது. மேலும், கிரிவல பாதை முழுவதும் பக்தர்களுக்கு அன்னதானம், மோர், பழரசம் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை நகருக்குள் கார், வேன், மற்றும் கனரக வாகனங்கள் நுழைய நேற்றும், இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும், 20 லட்சம் பக்தர்கள் வந்ததால், திருவண்ணாமலை திணறிப்போனது.