நாகர்கோவில்; கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு கேரளாவில் இருந்து பெண்கள் இருமுடி கட்டி வந்து, கடலில் குளித்து பொங்கலிட்டு அம்மனை வழிபடுவர். இக்கோவிலில் 2021 ஜூன் 2ல் கருவறை கூரை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதே ஆண்டு நவ., 24ல், 1.70 கோடி ரூபாயில் திருப்பணிகளை அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைத்தார். நான்கு ஆண்டுகளாக நடந்த இத்திருப்பணிகள் நிறைவு பெற்று நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. அதிகாலை, 4:00 மணி முதல் யாகசாலை பூஜைகள் தொடர்ந்து நடந்தது. காலை, 9:00 மணிக்கு கோபுரத்தில் உள்ள கும்பங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம், திருவிதாங்கோடு மகாதேவர் கோவிலிலும் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. மேலும், நாகர்கோவில் கிருஷ்ணன் கோவிலில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.