பதிவு செய்த நாள்
14
டிச
2012
10:12
சென்னை: ரயிலில் பயணிக்கும் அய்யப்ப பக்தர்கள், இருமுடிக்கு, தீபாராதனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில், விழிப்புணர்வு விளம்பர பிரதிகள், பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, நாடு முழுவதில் இருந்தும், லட்சக்கணக்கான பக்தர்கள், ரயில்களில் பயணம் செய்கின்றனர். இவர்கள், தாங்கள் கொண்டு செல்லும் இருமுடிக்கு, ரயில் பயணத்தின் போது, காலை மற்றும் மாலை வேளைகளில், கற்பூரம் கொளுத்தி தீபாராதனை செய்கின்றனர்.
புகையால் பாதிப்பு: தீபாராதனை செய்யும் போது, ரயில்களில் தீ விபத்து நடக்க வாய்ப்பு ஏற்படுகிறது; "ஏசி பெட்டிகளில், தீபாராதனை செய்யும் போது, ஏற்படும் புகை, இதர பயணிகளுக்கு, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இத்துடன், காலை மற்றும் மாலை நேரங்களில், பக்தர்கள், ரயில்களில் குளிக்கின்றனர். தண்ணீரை அதிகமாக செலவு செய்யும் போது, மற்ற பயணிகள், கழிவறை பயன்படுத்துவதற்கு தண்ணீர் இல்லாமல், திண்டாடும் நிலையும் உள்ளது. இதனால், "அய்யப்ப பக்தர்களுக்கு முக்கிய வேண்டுகோள் என்ற பெயரில், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம், ரயில் நிலையங்களில் விழிப்புணர்வு விளம்பரம் செய்யப்பட்டது. பாதுகாப்பு குறித்த விளம்பர பிரதிகளும் வழங்கப்பட்டன."ரயிலில் பயணம் செய்யும் போது, அய்யப்ப பக்தர்கள், இருமுடிக்கு கற்பூரம் ஏற்றி, தீபாராதனை செய்யக்கூடாது; தீபாராதனை செய்யும் போது, விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. கழிவறையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தவும் என, ரயில்வே பாதுகாப்பு படை துண்டு பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.