பதிவு செய்த நாள்
14
டிச
2012
03:12
குரு சீடர்களுக்கு பாடம் எடுத்தார். உடல் என்பது ஒரு மரம். அதில் பல கிளைகள் உள்ளன. ஒரு கிளையில் ஞானப்பறவையும், மற்றொன்றில் அஞ்ஞானப் பறவையும் அமர்ந்து உள்ளன. முதல் பறவை கடவுளையும், அடுத்த பறவை உலக விருப்பங்களையும் குறிக்கும். மனிதர்கள், அஞ்ஞானப்பறவை அமர்ந்த கிளையையே பிடித்துத் தொங்குகின்றனர். கடவுள் என்ற பறவைக்கு எதுவுமே ஒட்டுவதில்லை. ஆனால், மனிதப்பறவைக்கு உலக ஆசைகள் எல்லாமே ஒட்டுகிறது, என்றார். ஒரு சீடன் எழுந்து, இருவருக்குமே எல்லாமே ஒட்டும், அல்லது ஒட்டாது என்பதே உண்மை, என்றான். வேதம் சொல்வதையே நான் சொல்கிறேன். நீ வேதக்கருத்தை எதிர்க்காதே, உட்கார் என்றார் குரு. சீடனோ தன் கருத்தில் உறுதியாக இருந்தான். சரி... மார்கழி 27ம் தேதி என் பதில் சரி என நிரூபிக்கிறேன், என்றார் குரு. மார்கழி 27ல், திருப்பாவையின் கூடாரை வெல்லும் கோவிந்தா என்ற பாசுரத்தை எல்லாரும் பாடினர். இதைப் பாடினாலே நாக்கில் எச்சில் ஊறும். அக்கார அடிசில் என்னும் பாயாசத்தை கையில் நெய் வழியுமளவு தயார் செய்திருப்பர். அன்று அந்த மாணவனுக்கு அக்கார அடிசில் தரப்பட்டது. மாணவனும் திருப்தியாக சாப்பிட்டான். அவன் கையில் சீயக்காயைக் கொடுத்தார் குரு. பையனும், நெய் பிசுக்கு போக நன்றாகக் கழுவி விட்டு வந்தான். இன்னும் கொஞ்சம் சீயக்காயைக் கொடுத்து, நாக்கையும் கழுவிட்டு வா, என்றார் குரு. குருவே! கையில் தான் பிசுக்கு ஒட்டும். நாக்கில் ஒட்டாது, என்றான் சீடன். பார்த்தாயா! பாயாசத்துக்கே இப்படி என்றால், அந்த பரமாத்மாவுக்கு எப்பேர்ப்பட்ட சக்தி யிருக்கும்! அதனால் தான் அவனுக்கு ஆசைகள் ஒட்டுவதில்லை என்றேன், என்றார் குரு. பையனும் ஒப்புக்கொண்டான்.
கல்யாணப் பாட்டு: மாணிக்கவாசகரின் திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை மார்கழியில் சிவாலயங்களில் பாடுவர். திருவண்ணாமலையில் தங்கியிருந்த மாணிக்கவாசகர் அண்ணாமலையார் மீது திருவெம்பாவை பாடினார். கன்னிப்பெண்கள் ஒருவரை ஒருவர் துயில் எழுப்பி, ஒன்றுசேர்ந்து நீராடி கூட்டமாக இறைவனை வணங்குவதாக இப்பாடல்கள் இருக்கும். இதனைப் பாடினால் மழை பொழிந்து நாடு செழிக்கும். கன்னியருக்கு விரைவில் திருமணவாழ்வு கைகூடும். இதில் 20 பாடல்கள் உள்ளன. திருப்பெருந்துறையில் சிவன் துயில் நீங்கி எழுவதற்காக மாணிக்கவாசகர் பாடியது திருப்பள்ளியெழுச்சி. துயிலெடை நிலை என்று இதனைக் கூறுவர். அதிகாலையில் சிவன், துயில் நீங்கி பக்தர்களுக்கு கருணைக் காட்சி தரவேண்டும் என்பது இதன் நோக்கம். இதில் 10 பாடல்கள் உள்ளன. திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி இரண்டும் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளன.