பதிவு செய்த நாள்
18
டிச
2012
11:12
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், அரசியல் பிரமுகர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்ட சர்ச்சையை தவிர்க்கும் நோக்கத்தில், இந்த ஆண்டு, சொர்க்கவாசல் நுழைவுக்கான, வி.ஐ.பி., பாஸ் வழங்குவதை ரத்து செய்வது குறித்து, பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், வைகுண்ட ஏகாதசியன்று, சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சி நடக்கும். சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வந்து வழிபாடு செய்வர். டிசம்பர், 24 ம் தேதி, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. இலவச தரிசனம், கட்டண தரிசனம் ஆகியவற்றுடன், லட்சக்கணக்கில், வி.ஐ.பி., பாஸ் மூலமாகவும், பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர்.வி.ஐ.பி., பாஸ் வழங்குவதில், அரசியல் பிரமுகர்கள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால், சர்ச்சை ஏற்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, வி.ஐ.பி., பாஸ் வழங்குவதை ரத்து செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும், சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக, வி.ஐ.பி., பாஸ் வழங்கப்படும். ஐந்து பேர் செல்லக்கூடிய பாஸால் பல்வேறு பிரச்னை வந்தது. மேலும், இந்த ஆண்டு, திருவண்ணாமலை, திருச்சி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட முக்கிய கோவில்களில், வி.ஐ.பி., பாஸ் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனால், கோட்டை அழகிரிநாதர் கோவிலிலும், இந்த ஆண்டு, வி.ஐ.பி., பாஸ் வழங்குவதை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். கடந்த ஆண்டு, கட்டணம் தரிசனத்துக்காக, ஒன்றரை லட்சம் டிக்கெட் அச்சடிக்கப்பட்டது. தற்போது, கட்டணம் தரிசனத்துக்காக, எட்டு லட்சம் டிக்கெட் அச்சடிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் கட்டணம், 25 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கோவில் அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள், எம்.எல்.ஏக்கள்., உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு மட்டும் பிரத்யேகமாக, "பேட்ஜ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை அணிந்திருப்பவர்கள் மட்டும் கோவிலுக்குள், விரைவில் சென்று திரும்ப முடியும்.வயதான முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் மட்டும், கோவிலுக்குள் பிரத்யேகமாக செல்வதற்கு, தனி வழி ஏற்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆதிக்கம் செலுத்தும் அ.தி.மு.க.,வினர்கோட்டை அழிகிரிநாதர் கோவிலில், 2001-06 ம் ஆண்டு, அங்காவலர் குழுவில் அ.தி.மு.க., பிரமுகர்கள் பொறுப்புக்களை வகித்து வந்தனர். தி.மு.க., ஆட்சியில், அறங்காவலர் குழு மாற்றி அமைக்கப்பட்டது. பின்னர், தி.மு.க.,வினர் பதவிக்காலம் முடிந்ததும் விலகிக்கொண்டனர். மீண்டும், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அறங்காவலர் குழு அமைப்பது தொடர்பாக, எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.ஆனாலும், 2001-06ல் அறங்காவலர்களாக பொறுப்பு வகித்த வந்த அ.தி.மு.க., நிர்வாகிகள் பலர், கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில், முக்கிய விழா நாளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். கடந்த ஆண்டு, விழா குழுவினர் என்ற பெயரில், வி.ஐ.பி., பாஸ்களை பெற்று, அ.தி.மு.க., வினர், "நாட்டாண்மை செய்தனர். வரும், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போதும், ஆதிக்கம் செலுத்த தற்போதே, கோவில் அலுவலகத்துக்கு வந்து, அதிகாரிகளிடம் பேசி வருகின்றனர். இதனால் கோவில் அலுவலக பணி பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. கோவிலில் அ.தி.மு.க.,வினரின் ஆதிக்கத்துக்கு முற்றுபுள்ளி வைக்க முதல்வர் வரை புகார் அனுப்பப்பட்டுள்ளது.