திண்டிவனம் அருகே பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு
பதிவு செய்த நாள்
30
ஜூன் 2025 05:06
விழுப்புரம்; திண்டிவனம் அருகே மண்ணுக்குள் புதைந்து கிடந்த 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பிடிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் முரளி அளித்த தகவலின் பேரில், வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட குழுவினர், அக்கிராமத்தில் கள ஆய்வில் செய்தனர். அப்போது, பல்லவர் காலத்தை சேர்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது; கோவடி கிராமத்தில் வயல்வெளிகளுக்கு மத்தியில், மண்ணுக்குள் புதைந்திருந்த சிற்பத்தை சமீபத்தில் கண்டறிந்த அப்பகுதி மக்கள், அதனை துர்க்கை என வழிபட்டு வந்தனர். மண்ணை அகற்றி வெளியே எடுத்து பார்த்தபோது, 3 அடி உயரமுள்ள சிற்பம் மூத்ததேவி என தெரியவந்தது. எளிய தலை அலங்காரம், ஆடை அலங்காரத்துடன் மூத்ததேவி காட்சியளிக்கிறார். இரு கால்களையும் தொங்கவிட்டும் இரண்டு கரங்களும் தொடை மீது வைத்த நிலையிலும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பங்களில் இடம்பெறும் காக்கை கொடி இல்லை. வழக்கமாக மகன் மாந்தன், மகள் மாந்தி இருவரும் மூத்ததேவிக்கு அருகில் இருப்பார்கள். ஆனால், இச்சிற்பத்தில் அவளது இடுப்புக்கு கீழே காட்டப்பட்டுள்ளது, வித்தியாசமான அமைப்பாகும். பல்லவர் கலை அம்சத்துடன் காணப்படும் இந்த சிற்பம் கி.பி.7-8ம் நுாற்றாண்டை சேர்ந்தது. 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மூத்ததேவி வழிபாடு, தமிழகத்தின் தொன்மையான தாய் தெய்வ வழிபாடாகும். இந்த தெய்வத்தை தவ்வை, மா முகடி, முகடி என திருக்குறள் குறிப்பிடுகிறது. இந்த தாய் தெய்வ வழிபாடு, பல்லவர் காலத்தில் சிறப்புற்று இருந்தது. வளமை, செல்வம், குழந்தைப்பேறு ஆகியவற்றுக்கான தெய்வமாக மூத்ததேவி விளங்கினாள். விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் மூத்ததேவியின் சிற்பங்கள் கிடைத்துள்ளன. கோவடி அருகே மொளசூர் கிராமத்திலும், இரண்டு மூத்ததேவி சிற்பங்கள் இருக்கின்றன. இப்பகுதியில் 1300 ஆண்டுகளுக்கு முன்பு மூத்ததேவி வழிபாடு சிறப்பாக இருந்ததன் வரலாற்று தடயமாக இச்சிற்பம் கிடைத்துள்ளது என்றார்.
|