பதிவு செய்த நாள்
02
ஜூலை
2025
06:07
விழுப்புரம்; விழுப்புரம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம், காமராஜர் வீதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, கடந்த 30ம் தேதி கோ பூஜை, கணபதி ஹோமத்தோடு துவங்கியது. தொடர்ந்து முதற்கால பூஜைகள், இரண்டாம் கால பூஜைகள், மூன்றாம் கால பூஜைகள், நான்காம் கால பூஜைகள் நடைபெற்றன. பின், இன்று அதிகாலை 4:00 மணிக்கு வேதிகா பூஜாராதனம், நாடி சந்தானம், மகா பூர்ணாஹூதி, சதுர்வேத சமர்ப்பணம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, 6:15 மணிக்கு யாத்ரா தானம், கலச புறப்பாடு, 6.45 மணிக்கு ராஜ கோபுரம், விமான கோபுரம், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, கணபதி, பாலமுருகர், ராமர் சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம், தீபாராதனை நடந்தது. இந்த கும்பாபிஷேகம் விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகம், தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது. இரவு 7:30 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை, ஆர்ய வைஸ்ய சமூக தலைவர் பிரகாஷ், துணை தலைவர் குமார், செயலாளர் குபேரன், துணை செயலாளர் குணசேகரன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி உட்பட நிர்வாகிகள் பலர் செய்தனர்.