பதிவு செய்த நாள்
03
ஜூலை
2025
10:07
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவித்த யாத்ரீகர்கள் 40 பேரை மீட்புபடையினர் பத்திரமாக மீட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தில் கொட்டி தீர்த்து வரும் கனமழையால், பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கேதார்நாத் தாமில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, பத்ரிநாத் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில், யாத்ரீகர்கள் 40 பேர் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் விரைந்தனர்.
இதையடுத்து, சிக்கித் தவித்த, பக்தர்கள் 40 பேரை மாநில பேரிடர் மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். பல பகுதிகளில், சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அக்ரகால், சம்பா, ஜாகிந்தர் மற்றும் துக்மந்தர் போன்ற பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் சேதமடைந்துள்ளது. டேராடூன், தெஹ்ரி, நைனிடால் மற்றும் பாகேஷ்வர் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து உள்ளது.