பஜனை என்பது ஆன்மிக உணர்வுடன் கூடிய சுகமான அனுபவம்; 100 ஆண்டுகள் நிறைவு
பதிவு செய்த நாள்
05
ஜூலை 2025 10:07
கோவை; பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் பஜனை குழு, 100 ஆண்டுகள் நிறைவடைந்த பெருமை பெற்றதாக விளங்குகிறது. கடவுளை இசை வடிவில் வழிபடவே பஜனை தோன்றியது. அக்காலத்தில் பொழுதுபோக்குக்காக நாடகம், நாட்டியம் இருந்தபோது, இறைவனை வழிபட பலர் சேர்ந்து, அந்தந்த பகுதிகளில் உள்ள இறைவனுடைய துதி பாடல்கள், புரந்தரதாசர் கீர்த்தனைகள், கனகதாசர் கீர்த்தனைகள், திவ்ய பிரபந்த பாடல்கள், உள்ளூர் பக்தி பாடல்களை இசை கருவிகளுடன், கோவில்களில், வாய்மொழியாக இறைவனை துதித்து பாடப்பட்டதே பஜனை எனப்படுகிறது. முதலில் அம்மன் கோவில், பெருமாள் கோவில்களில் பாடப்பட்ட பாடல்கள், பிற்காலத்தில் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவில்களில் பிரதானமாக பாடப்பட்டது. காலப்போக்கில் குறிப்பாக, பெருமாள் கோவில்களில் புரட்டாசி, மார்கழி உள்ளிட்ட பல்வேறு முக்கிய விழா காலங்களில் பஜனை என்பது முக்கிய சம்பிரதாயமாக மாறியது. மார்கழி மாதம் முழுவதும், ஆண்டாள் திருவுருவப்படத்தை கைகளில் ஏந்தி, அதிகாலை பெருமாள் கோவிலை சுற்றியுள்ள முக்கிய வீதிகளில், இசைக்கருவிகளுடன் ஆண்டாள் திருப்பாவையை பாடியபடி நகர் வலம் வருவது, ஒவ்வொரு பஜனை குழுவின் முக்கிய நோக்கமாக மாறியது. இதில் ஆண்களும், பெண்களும் பக்தி உணர்வுடன் திருப்பாவையின், 30 பாடல்களையும் பாடி வலம் வருவர். பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் பஜனை குழுவினர் இது குறித்து கூறுகையில், நூறாண்டு பழமையான எங்கள் பஜனை குழுவில் தற்போது சுமார், 40 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இப்போதும் சனிக்கிழமை தோறும் கோவிலில் இரவு, 2 மணி நேரம் பெருமாளை துதித்து, பஜனையில் ஈடுபடுகின்றோம். விட்டல்தாஸ் மகராஜ், செங்கோட்டை ஹரிஹர சுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு குழுவினரின் ராதா கல்யாணம் உள்ளிட்ட தொடர் பஜனை நிகழ்வுகள் பல்வேறு இடங்களில் நடப்பதால், இன்று இளைஞர்களிடம் பஜனை சம்பிரதாயம் குறித்த ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பஜனை என்பது ஒரு ஆன்மிக உணர்வுடன் கூடிய ஒரு சுகமான அனுபவம். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என்றனர்.
|