சென்னை; சங்கரா கல்வி, மருத்துவ குழுமங்களில் பல ஆண்டுகளாக சிறந்த சேவையாற்றியவர்களுக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் விருதுகளை வழங்கி ஆசிர்வதித்தார்.
பம்மல் சங்கர வித்யாலயாபள்ளிக்கு விஜயம் செய்துள்ள காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேற்று காலை அங்குள்ள சுந்தர விநாயகர், ஆஞ்சநேயர், அய்யப்பன் கோவிலுக்கு விஜயம் செய்து தரிசித்தார். பின், சங்கர வித்யாலயா திரும்பிய மடாதிபதி, மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுளீஸ்வரர் பூஜை நடத்தினார். பின், பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். இதையடுத்து, சவுந்தர்யலகரி பாராயணம் நடந்தது.அதைத் தொடர்ந்து, 2,535 ஆண்டுகள் காஞ்சிமட பாரம்பரியம் குறித்து, நெரூர் ரமண சர்மா உபன்யாசம் நடந்தது. நேற்று மாலை பம்மல் சங்கரா மெட்ரிக்குலேஷன் பள்ளி, குளோபல் பள்ளி, நர்சிங் கல்லுாரி, ஆப்டோ மேட்ரிக் கல்லுாரி, பல்நோக்கு மற்றும் கண் மருத்துவமனை, முதியோர் இல்லம் ஆகியவற்றில், ஐந்து முதல் 30 ஆண்டுகளுக்கு மேலாக சேவையாற்றியவர்கள் கேடயம், பரிசுத் தொகையை வழங்கி, விஜயேந்திரர் ஆசிர்வதித்து அருளாசி வழங்கினார். இதைத் தொடர்ந்து திருமணம் ஆகாதவர்களுக்கு, விரைவில் திருமணம் நடக்க ஸ்வயம்வர பார்வதி பூஜை நடத்தப்பட்டது. இன்று காலை சந்திரமவுலீஸ்வர் பூஜை, மாலை குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துவக்கப்படும் யாகசாலை பூஜைகளில் பங்கேற்கிறார். வரும், 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை, திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த தண்டலம், சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு விஜயம் செய்து, பூஜைகள் நடத்தி, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.