திருச்செந்துார் கோவில் கருவறையில் சிருங்கேரி சுவாமிகள் சிறப்பு வழிபாடு
பதிவு செய்த நாள்
08
ஜூலை 2025 11:07
துாத்துக்குடி; சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கருவறையில் நேற்று வழிபாடு நடத்தினார். திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் பங்கேற்றார். நேற்று காலை, 4:00 மணிக்கு யாகசாலைக்கு சென்ற அவருக்கு, கோவில் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின், முக்கிய விமானமான சுப்பிரமணிய சுவாமி கர்ப்ப கிரகத்தின் விமானத்தை சென்றடைந்தார். அந்த விமானம், போத்திமார்கள் செய்யும் கும்பாபிஷேக விமானமாகும். கும்பாபிஷேகத்திற்கான மங்கள பொருட்களான மாலை, கலசத்திற்கான வஸ்திரம் மற்றும் புனித நீர் ஆகியவற்றை சுவாமிகள் தன் திருக்கரங்களால் தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர், அவர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்கு முன், 20 நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்து சுப்பிரமணிய சுவாமியை பிரார்த்தித்தார். பின்னர், ஸ்ரீ மடத்திற்கு திரும்பிய சுவாமிகள், குகானந்த திருப்புகழ் சபாவிற்கு விஜயம் செய்து வழிபட்டார். பின்னர், மண்டபத்தில் குழுமியிருந்த பக்தர்களின் பாத பூஜை, பிட்ஷா வந்தனம் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டார். அங்கே சுவாமிகளை கோவில் அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தரிசனம் செய்து பிரசாதம் பெற்றுக் கொண்டனர். சிருங்கேரி சுவாமிகள் திருச்செந்துார், ராமேஸ்வரம், பழனி போன்ற புனித ஸ்தலங்களுக்கு வரும் சமயம், கோவில் கருவறைக்குள் சென்று பூஜை செய்யும் உரிமை அவர்களுக்கு உண்டு. அந்த சம்பிரதாயத்தின் அடிப்படையில், நேற்று மாலை, 6:00 மணிக்கு சுவாமிகள் முருகன் கருவறைக்கு சென்றார். அங்கு மிக விரிவாக பூஜையை செய்து, பட்டு வஸ்திரங்கள், அர்ச்சனை தீபாராதனை சமர்ப்பித்து வழிபட்டார். அது சமயம் சுப்பிரமணிய சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்யும் 2 கிலோ எடை வெள்ளி பாத்திரம் ஒன்றை அதிகாரிகளிடம், சிருங்கேரி சாரதா பீடம் சார்பாக சுவாமிகள் வழங்கினார். அதன் பின் ஸ்ரீ மடத்திற்கு திரும்பிய சுவாமிகள், திருச்செந்துார் சமூகத்தில் அனைவருக்கும் சிறப்பு மரியாதையும், பிரசாதமும் வழங்கினார். அதன் பின் சந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்தார். திருச்செந்துாரில் 1983ல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் சிருங்கேரியின் 36வது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த சுவாமிகள் கலந்துகொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. திருச்செந்துார் விஜயத்தை முடித்துக் கொள்ளும் சுவாமிகள் இன்று காலை துாத்துக்குடியில் இருந்து விமானத்தில் சிருங்கேரி மடத்திற்கு புறப்பட்டு செல்கிறார்.
|