திருவள்ளூர் மாவட்டம், தண்டலம் கிராமத்தில் காமாட்சி அம்மன் சமேத தரணீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.இதையடுத்து, இம்மாதம் 2ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தினமும் தனபூஜை, சாந்தி ஹோமம், அங்குரார்ப்பணம், ஆறு கால யாக பூஜைகள், விசேஷ சாந்தி, யாத்ரா தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று, 9:00 – 10:30 மணிக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு சுவாமியின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.