மத நல்லிணக்க முகரம் பண்டிகை: தலையில் நெருப்பு கங்குகளை கொட்டி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 01:07
சாயல்குடி; ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே பெரியகுளத்தில் முகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க நிகழ்ச்சியாக நேர்த்திக்கடன் பெண் பக்தர்கள் தலையில் நெருப்பு கங்குகளை கொட்டியதோடு, ஆண்கள் அக்னி குண்டத்தில் இறங்கினர்.
சாயல்குடி அருகே பெரியகுளத்தில் பழமை வாய்ந்த மாமு நாச்சி அம்மன் தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் முகரம் பண்டிகையை முன்னிட்டு மத நல்லிணக்க பூக்குழி இறங்கும் விழா பல நுாற்றாண்டுகளாக நடந்து வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக கடந்த ஆண்டு நடந்த அக்னி குண்டத்தின் அடியில் மண்பானையில் வைக்கப்பட்ட பானகம் மற்றும் பச்சரிசி மாவு ரொட்டி துண்டுகள் எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். மீண்டும் திருவிழா நிறைவடைந்தவுடன் இதே போன்று புதிதாக வைக்கும் நடைமுறை உள்ளது. நேற்று முன்தினம் சப்பரத்தின் உள்ளே வெள்ளியால் வடிவமைக்கப்பட்ட கை உருவங்கள் மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக பவனி வந்தது. பெரியகுளம் கிராமம் முழுவதும் மின்னொளியால் வழி நெடுகிலும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மாமுநாச்சி அம்மன் தர்கா முன்புறம் வட்ட வடிவத்தில் பெரிய அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்கள் கையில் பச்சை வண்ண பிறை கொடியுடன் அக்னி குண்டத்தில் இறங்கினர். நேர்த்திக்கடன் கொண்ட பெண்கள் தலையில் முக்காடிட்டு அமர்ந்திருக்க மண்வெட்டியால் நெருப்பு கங்குகளை தலையில் கொட்டும் நிகழ்ச்சி நடந்தது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.