திருவாலங்காடு கங்கையம்மன் கோவிலில் ஜாத்திரை விழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூலை 2025 02:07
திருவாலங்காடு; திருவாலங்காடில் கங்கையம்மனுக்கு நடந்த ஜாத்திரை விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். ஆனி மாதத்தை ஒட்டி திருவாலங்காடில், ஒன்பது நாட்களாக ஜாத்திரை விழா கோலாகலமாக நடந்தது. கடந்த 1ம் தேதி ஏரிக்கரை அருகே உள்ள கிராம தேவதை கங்கையம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து காலை – மாலை என, இருவேளையும் அலங்கரிக்கப்பட்ட கரகம் எடுத்துக் கொண்டு கிராமத்தை சுற்றி வலம் வந்தனர். நேற்று முன்தினம் கிராம பெண்கள், காலை 9:00 மணிக்கு பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். நேற்று இரவு அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று வேப்பிலை ஆடை அணிந்தும், உடலில் அலகு குத்திக் கொண்டும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.