திருப்போரூர்; வளர்குன்றம் கிராமத்தில், செங்கழணி அம்மன் கோவில் கும்பாபிஷேகம், கோலாகலமாக நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்தில் உள்ள வளர்குன்றம் கிராமத்தில், பிரசித்தி பெற்ற செங்கழணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சமீபத்தில் புனரமைப்பு பணிகள் முடிந்த நிலையில், கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று இக்கோவில் கும்பாபிஷேகம் விழா கோலாகலமாக நடந்தது. முன்னதாக, கடந்த ஜூன் 29ம் தேதி காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 5ம் தேதி விநாயகர் பூஜையுடன், மஹா கும்பாபிஷேக விழா துவங்கியது. பின், முக்கிய வீதிகள் வழியாக தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து, நான்கு கால யாக சாலை பூஜை, சிறப்பு யாகம், கலசாபிஷேகம் ஆகியவை நடந்தன. நேற்று காலை, 9:00 மணி முதல், 10:00 மணிக்குள் கோவில் கலசங்களின் மீது புனித தீர்த்தம் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில், சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், பெருந்தண்டலம் ஊராட்சி முன்னாள் தலைவர் சிவகுமார், கிராம பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.