குருவே சரணம்; கோவிந்தவாடி குரு கோவிலில் கும்பாபிஷேகம் வெகு விமர்சை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூலை 2025 11:07
காஞ்சிபுரம்; கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா வெகு வவிமர்சையாக நடைபெற்றது. குருவே சரணம் குருவே சரணம் என கோஷமிட்டு பக்தர்கள் பரவச தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே அமைந்துள்ள கோவிந்தவாடியில் அருள்பாலிக்கும் சிறப்புமிக்க தட்சிணாமூர்த்தி ஈஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ஈஸ்வரரை தரிசித்து அருளைப் பெற்றனர். வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலை பூஜைகள் நடைபெற்று, கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. கோவிந்தவாடி தட்சிணாமூர்த்தி ஈஸ்வரர் கோயில், குரு தோஷங்கள் நீக்கும் பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் சிவபெருமானே குருவாகக் காட்சி தந்து மகாவிஷ்ணுவுக்கு உபதேசித்தார் என்பது ஐதீகம். மகாவிஷ்ணு (கோவிந்தன்) சிவனைப் போற்றி பாடல்கள் பாடி வழிபட்ட தலம் என்பதால் "கோவிந்தபாடி" என்று அழைக்கப்பட்டு, தற்போது "கோவிந்தவாடி அகரம்" என மருவிவிட்டது. இங்கு தனி கருவறையில் தட்சிணாமூர்த்தி தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். சுமார் ஆறடி உயரமுள்ள இந்த தட்சிணாமூர்த்தியின் விழிகள், அனைவரையும் பார்ப்பது போலவும், அதே சமயம் எவரையும் பார்க்காதது போலவும் காட்சியளிப்பது தனிச்சிறப்பு. இவர் வியாக்யான வடிவ தட்சிணாமூர்த்தி ஆவார். பெருமாளுக்கு தனித்துக் காட்சி தந்தவர் என்பதால், இவருக்குமேல் கல்லால மரம் இல்லாமல், கைலாயம் போன்ற அமைப்பில் மண்டபம் உள்ளது.
சிவனே தட்சிணாமூர்த்தியாக வீற்றிருந்து உபதேசம் செய்தவர் என்பதால், இவர் நெற்றியில் மூன்று கண், தலையில் பிறைச்சந்திரன், கங்கா தேவியுடன் காட்சியளிக்கிறார். வலக்கரம் சின்முத்திரை காட்டியும், இடக்கரம் சுவடி ஏந்தியும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தட்சிணாமூர்த்தி மூலவராக வீற்றிருக்கும் மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். இக்கோயிலுக்கு வந்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால், புத்தியில் தெளிவும், காரியத்தில் வெற்றியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. பிரசித்தி பெற்ற கோவிலில் கும்பாபிஷேக விழா என்பதால், ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.