சூலுார்; ரங்கநாதபுரம் ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். கண்ணம்பாளையம் பேரூராட்சி ரங்கநாதபுரம் கே.என்.கே., நகரில் உள்ள ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மன் கோவில் பழமையானது. இங்கு, வர்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் முடிந்து, கடந்த, 11 ம்தேதி காலை, 9:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. கோபுர கலசம் நிறுவுதல், யந்திர பிரதிஷ்டை, அஷ்ட பந்தன மருந்திடல் உள்ளிட்டவைகள் நடந்தன. மறுநாள் காலை தீர்த்தம், முளைப்பாலிகை எடுத்து வரப்பட்டன. மாலை, 4:30 மணிக்கு, முதல்கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று முன்தினம் காலை, 6:30 மணிக்கு இரண்டாம் கால ஹோமம் முடிந்து, புனித நீர் கலசங்கள், மேள, தாளத்துடன் கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டன. விமானம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஸ்ரீ தங்கமுத்து மாரியம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மகா அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.