நாளை ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் நீராட சிறப்பு ஏற்பாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 03:07
ராமேஸ்வரம்; நாளை (ஜூலை 24) ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல், 22 தீர்த்தங்களில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் வருவர் என்பதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இக்கோயிலில் ஆடித்திருக்கல்யாண திருவிழாவிற்காக ஜூலை 19ல் கொடி ஏற்றப்பட்டது. 6ம் நாள் திருவிழாவான நாளை ஆடி அமாவாசையையொட்டி காலை 11:00 மணிக்கு தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமர் அக்னி தீர்த்த கடற்கரையில் எழுத்தருளி பக்தர்களுக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும்.தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து அக்னி தீர்த்த கடல், கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராட உள்ளனர். இதற்காக கோயில் வளாகத்தில் பக்தர்கள் நீராட செல்ல வசதியாக தடுப்பு வேலிகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கான பாதுகாப்பு குறித்து கோயில் ஆணையர் செல்லத்துரை அலுவலர்களுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.