ஆடி அமாவாசையில் என்ன செய்ய வேண்டும்.. என்ன செய்யக்கூடாது?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஜூலை 2025 03:07
பொதுவாக அமாவாசை நாட்களில் நம் முன்னோர்களுக்கு நீத்தார்கடன் செய்யும் வழக்கம் நம் நாட்டில் தொன்றுதொட்டு நிலவி வருகிறது. அவற்றில் உத்தராயன முதல் மாதத்தில் வரும் தை அமாவாசையும், தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசையும் மிகவும் போற்றப்படுகின்றன. மகாளயபட்சம் என்ற புரட்டாசி அமாவாசையும் இந்த தட்சிணாயன காலத்தில் மிகவும் சிறப்பிக்கப்படுகிறது. ஆடி அமாவாசை அன்று புனித நீர் நிலைகளான கடற்கரை, ஆற்றங்கரை, குளக்கரைகளில் அமைந்துள்ள கோவில்களில் நம்முடன் வாழ்ந்து முக்தியடைந்த நம் பெற்றோர்கள் மற்றும் முன்னோர்களுக்கு வேதவிற்பன்னர் உதவியுடன் நீத்தார்களுக்கான பிதுர்பூஜை செய்தால், எடுத்த காரியம் தடையின்றி நடைபெறும்; குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்து காணப்படும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.
முன்னோர்கள் வரவேற்க வீட்டை முதல் நாளே சுத்தம் செய்ய வேண்டும். அமாவாசை அன்று வீட்டில் ஒட்டடை அடித்தல், சுத்தம் செய்தல் கூடாது. அமாவாசை நாளில் மறந்தும் நாம் வீட்டு வாசலில் கோலம் போடக்கூடாது. அமாவாசை நாளில் அசைவம் சமைக்கக்கூடாது. கேளிக்கை, சுபநிகழ்ச்சிகளை இந்நாட்களில் தவிர்க்க வேண்டும் என்பது விதி. காகத்திற்கு கண்டிப்பாக உணவு வைக்க வேண்டும். அமாவாசை நாளில் நம் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபாடு செய்யவேண்டும். அந்த ஆடை. உணவை ஏழைகளுக்கு தானமாகக் கொடுப்பதன் மூலம் அளவற்ற நன்மைகள் நம் வாழ்வில் உண்டாவதை நாம் உணர முடியும். தடைபட்ட திருமணம், வேலையின்மை, நீண்ட நாள்பட்ட நோய்நொடிகள், மன வருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் நம் இல்லத்திலும் உள்ளத்திலும் ஊற்றெடுக்கும்.