தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறையில், ஆடி அமாவாசையையொட்டி, பல்லாயிரக்கணக்கான மக்கள், தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.
முன்னோர்களுக்கு, அவர்களின் சந்ததியினர், ஆண்டுதோறும் திதி, தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவது நமது வழக்கம். குறிப்பாக, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை, ஆடிப்பெருக்கு தினங்களில், முன்னோர்களுக்கு, திதி, தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட்டால், குடும்பம் செழிக்கும். இதனால், முக்தி ஸ்தலமான பேரூரில், ஆண்டு முழுவதும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வந்து தங்களின் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், ஆடி அமாவாசை தினமான இன்று அதிகாலை முதலே, தமிழகம் மற்றும் கேரளாவின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், பேரூர் படித்துறைக்கு குவிந்தனர். அங்கு, புரோகிதர் முன்னிலையில், முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து, பசுமாட்டிற்கு அகத்திக்கீரையும், ஏழை எளிய மக்களுக்கு, அன்னதானமும் கொடுத்து சென்றனர். கோவிலில், நெய் விளக்கு ஏற்றியும் பொதுமக்கள் வழிபட்டனர். கடந்த மே மாதம் திறக்கப்பட்ட புதிய தர்ப்பண மண்டபம் மற்றும் ஆற்றின் கரையில் இருந்து பழைய தர்ப்பண மண்டபத்திலும், ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்ததால், பேரூர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நொய்யல் ஆற்றில், பழைய துணிகளை வீச வேண்டாம் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.