சுருளி அருவியில் திரண்ட கூட்டம் : முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஜூலை 2025 01:07
கம்பம்; ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று அதிகாலை முதல் சுருளி அருவியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் குவிந்தனர். வெள்ளப் பெருக்கு காரணமாக குளிக்க தடை விதிக்கப்பட்டு 5 நாட்களுக்கு பின், இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. தென் மாவட்டங்களில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு சிறந்த தலங்களாக திருப்புவனம், சுருளி அருவி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. சுருளி அருவியில் குளித்து, அங்கு தர்ப்பணம் செய்தால், மறைந்த முன்னோர்களது ஆன்மா திருப்தியடையும் என்பது ஐதீகம். மேலும் இங்குள்ள பூத நாராயணர் கோயில் பழமையான பிரசித்தி பெற்ற கோயிலாகும். தர்ப்பணம் முடித்து இங்கு மோட்ச தீபம் ஏற்றினால் முன்னோர்கள் திருப்தியடைவார்கள் என்பதும் நம்பிக்கை.
சுருளி அருவியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் சிரமப்பட்டு வாகனங்களை ஒழுங்கு படுத்தினர். வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த ஒரு வாரமாக அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. வெள்ளப் பெருக்கு குறைந்ததை தொடர்ந்து இன்று முதல் குளிக்க அனுமதித்தனர். நேற்று காலை திரளாக பொதுமக்கள் அருவியில் குளித்து, ஆற்றங்கரையில் அமர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். காக்கைகளுக்கு உணவிடுவது, அன்னதானம் கொடுப்பது, ஆற்றில் எள்ளு விடுவது என செய்தனர். முன்னதாக பூதநாராயணர் கோயில், சுருளிவேலப்பர் கோயில், ஆதி அண்ணாமலையார் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் திரளான பொதுமக்கள் பங்கேற்று தங்களது முன்னோர்களின் பெயர்களில் அர்ச்சனை செய்து, மோட்ச தீபம் ஏற்றினர். ஆதி அண்ணாமலையார்கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. சிவனடியார் முருகன் சுவாமிகள் ஏற்பாடுகளை செய்திருந்தார்.