திருப்புவனம்; காசியை விட வீசம் பெரியது என அழைக்கப்படும் புண்ணிய ஸ்தலமான திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். இந்துக்களின் புண்ணிய ஸ்தலமான காசியை விட திருப்புவனம் அதிகம் புண்ணியம் தரும் என போற்றப்படுகிறது. திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க இந்துக்கள் ஏராளமானோர் வருகை தருவதுண்டு, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்ற தினங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி விட்டு வைகை ஆற்றில் நீராடி புஷ்பவனேஸ்வரரை தரிசனம் செய்து விட்டு செல்வார்கள், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதுண்டு, இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே வைகை ஆற்றில் குவிந்தனர். மந்திரங்களை புரோகிதர்கள் அங்காள ஈஸ்வரன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் முழங்கினர். போலீசார் வைகை ஆற்றிற்குள் செல்லும் பாதையில் வாகனங்களை அனுமதிக்கவில்லை. இதனால் பக்தர்கள் நெரிசல் இன்றி திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர். பக்தர்கள் குளிக்க எந்த வித வசதியும் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.