வாரணாசியில் கங்கை தீர்த்தம் கொண்டு வந்து பிரதமர் மோடி சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜூலை 2025 02:07
அரியலூர்: முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கங்கை தீர்த்தம் கொண்டு வந்த பிரதமர் மோடி, சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தார்.
தமிழகத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி வந்துள்ளார். நேற்றிரவு தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். பின்னர் இரவு 10 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். திருச்சியில் உள்ள ஓட்டலில் இரவு தங்கிய பிரதமர் மோடி இன்று (ஜூலை 27) கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு சென்றார். அவர் செல்லும் வழியில் திரண்டிருந்த பாஜவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் மோடி சென்றார். சோழகங்கம் முதல் கங்கைகொண்ட சோழபுரம் கோவில் வரை பிரதமர் மோடி ரோடு ஷோவில் வழியெங்கும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களை பார்த்து கையசைத்தபடி காரில் சென்றார். அப்போது பிரதமர் மோடி வெள்ளை நிற வேஷ்டி, சட்டை அணிந்து இருந்தார். காரின் கதவை திறந்து, நின்றவாறு பிரதமர் மோடி சாலையில் திரண்டிருந்த மக்களை பார்த்து கை அசைத்தார்.
சாமி தரிசனம்; முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
கங்கை நீரில் அபிஷேகம்; வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரை கொண்டு பிரதமர் மோடி, சோழீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தார். ஓதுவார்கள் திருவாசகம் பாட, தீபாராதனை காட்டி தமிழில் வழிபாடு நடத்தினார்.
கண்காட்சியை பார்வையிட்டார்; புகழ்பெற்ற கங்கை கொண்ட சோழீசுவரர் கோவிலில், பிரதமர் மோடி கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.