பதிவு செய்த நாள்
27
ஜூலை
2025
06:07
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், ஆடிக் குண்டம் திருவிழா கொடியேற்றம் நடந்தது.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், 32ம் ஆண்டு ஆடிக் குண்டம் விழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. 25ம் தேதி லட்சார்ச்சனை பூஜை நடந்தது. இன்று காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. காலை 10:30 மணிக்கு தேக்கம்பட்டி கிராம மக்கள், சிங்கம் உருவம் பொறித்த கொடியை கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வந்தனர். பவானி ஆற்றின் கரையோரம் உள்ள முத்தமிழ் விநாயகர் கோவிலில், கொடிக்கு சிறப்பு பூஜை செய்தனர். கொடியை ஏந்தி வந்த, தேக்கம்பட்டி பொதுமக்களை, கோவில் நிர்வாகத்தின் சார்பில், மாலை மரியாதை செலுத்தி அழைத்து வந்தனர். பின் கோவிலில் அம்மன் முன், கொடிக்கு சிறப்பு பூஜை செய்து, கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. அதன் பின் யாக வேள்வி பூஜைகள் நடந்தன. இதில் தேக்கம்பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
நாளை மாலை பொங்கல் வைத்து குண்டம் திறக்கப்பட உள்ளது. 29ம் தேதி அதிகாலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து, அம்மன் அழைப்பும், காலை, 6:00 மணிக்கு குண்டம் இறங்குதலும் நடக்க உள்ளதுை வரும் 30ம் தேதி, மாவிளக்கு மற்றும் பூப்பல்லக்கில் அம்மன் திருவீதி உலா, 31ம் தேதி பரிவேட்டை மற்றும் வாணவேடிக்கை நடக்க உள்ளது. ஆக., 1ம் தேதி மகா அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், 4ம் தேதி, 108 குத்துவிளக்கு பூஜையும், 5ம் தேதி மறு பூஜையும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் உதவி கமிஷனர் கைலாசமூர்த்தி, தக்கார் மேனகா செய்து வருகின்றனர்.